Thursday, December 15, 2011

கெட்ட வார்த்தை பேசுவோம் {பகுதி ஓன்று }

கெட்ட வார்த்தை பேசுவோம் {பகுதி ஓன்று }

Sunday, October 9, 2011

cinemaa express interview


எனது "ஏலேய்"கவிதைத் தொகுப்புக்கு அறிவுமதி அண்ணன் எழுதிய முன்னுரை


சீம்பால்

ஏலே... எடுபட்ட பசங்களா... எம் பேரம்பத்திக எழுதுறதெஎல்லாம் பழுதுன்னு சொல்லி பரிகாசம் பண்றீங்களாமே!

உங்க மூஞ்சிமேல சாணிய ஊத்தி... இத்துப் போனதுன்னு சொல்லி ஏறவானத்துல சொருகி வச்ச ஈக்கிமாத்த எடுத்து சாமியாடுனன்னா  தாங்கமாட்டீங்க.

வேகாத வெயில்ல காஞ்சி கருமாயம்பட்டு... ஆடிக்காத்துல ஆட்டுப்புழுக்கைங்க அல்லோலப்படுற மாதிரி... அல்லும்பகலும் உங்களுக்காகவே உழைச்சி ஒழச்சி ஓடாப்போன எங்க வாழ்க்கதா இத்துப்போன முல்லாட்டம் இந்தக் காடுகரம்புலேயே கழிஞ்சிபோனாலும் எம்பேரம் பேத்திகளாவது ரெண்டு எழுத்து கத்துக்கிட்டு... பட்டணப்பக்கம் போயி பச்சகண்டு மேயட்டும்னு பத்திவிட்டா... இங்க என்னா உங்களுக்கெல்லாம் எழுத்து மசுருன்னு ஏகத்தலாமா ஏகடியம்  செய்றீங்களாமே!

பாம்பு புடுங்குனாலும் பத்தியம் பாக்காம... தேளு கொட்டுனாலும் தேச்சிவுட்டுட்டு... பாடுபட்டு பாடுபட்டு உங்க பட்டாசாலையில கொண்டுவந்து கொட்டக் கொட்ட... அவுச்சி ஆவாட்டியாக்கிக் குந்தாணியில போட்டு குத்திகுத்திக் கொடுத்தா... பொடச்சிக் கொடுக்க சொல்லி படைக்கிறமாதிரி பாவன காட்டிப்புட்டு... பருப்பும் நெய்யுமா போட்டு நல்லா மூச்சுப்பிடிக்க முழுங்கிட்டு... அதக்கி அதக்கிக் குசுவ விட்டுக்கிட்டே நீங்க எழுதனதானடா இலக்கியங் கிழக்கியம்னுட்டு எகிறிக் குத்திக்கிறிங்க.

எங்ககிட்ட இல்லாத இலக்கியமாடா உங்ககிட்ட... மாருலருந்து பாலு சுரக்கற மாதிரி மனசிலேருந்து பாட்டு சுரக்கற பரம்பரடா எங்களது.

நடவுக்கும் அறுப்புக்கும் நாந்துக்குனியாத... நாத்து புடுங்கவும்... மொழி புடிக்கவும் வயல்ல எறங்காத உங்களோட எழுத்து மசுரெல்லாம்... எங்கக்குலவ பாட்டுக்கிட்டேயும் நடவுப்பாட்டுக்கிட்டேயும் எந்த வகையிலடா எதிர்ல நிக்கமுடியும்?

ஏதோ  விமர்சன  வெங்காயமாம்...

எங்க பேரம்பேத்திக கூழுக்காச்சி ஆறப்போட ஈயத்தட்டுல எதவா கொட்டுனா... இதெல்லாம் பீ பீன்னு சில 'செனப்பன்னிக' சிலுப்பிவுட்டுக்கிட்டு சிரிக்குதுகளாம்!

ஏலே... உங்க எழுத்த நீங்க எழுதிக்கிங்கடா... எங்க எழுத்த எங்கள எழுதவுடுங்கடா... இதெல்லாம் எழுத்து இல்லடா. எங்களோட பாட்டன்பாட்டிக... அப்பன் ஆத்தாளுக ஆண்டாண்டுகாலமா உழைப்போடையே உலர்ந்துடாம கொண்டுக்கிட்டுவந்து எங்ககிட்ட கொடுத்த ஈரம்டா...

எம் பேரன் வே. ராமசாமி இதுல எழுதியிருக்கிறதெல்லாம் வேர்க்கவிதைகள்டா. வேர்கள் இறக்கி... வீரனார்க்கோயில் காடு மாதிரி பச்சகட்டி பம்மி நிக்குற இந்த எழுத்துக்குள்ள நொழஞ்சி பாருங்க. வெளிய வர்ற வழி தெரியாம விழி பிதுங்கிப் போயிடுவீங்க.

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வமென்
அன்னை

பனைதாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுன்சூரியன்...

கைக்குக் கிடைப்பானெனில்
இவ்
அரிவாளால்
துண்டு துண்டாக
வெட்டித் தரிப்பேன்
ஒரு
சுள்ளி போலே...

இப்படி எழுத ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். வாழ்ந்திருக்கிறான் வே. ராமசாமி. வாய்க்குமோ...    'ஞானங்' களுக்கு இவையெல்லாம்!

இளைங்கர்களற்று
வெறிச்சோடிக் கிடக்கிறது
தெருமுனைத் திண்ணை

ஏன்... ஏன்...   வேளாண் விஞ்ஞானிகளென்று   உங்களிடம் எம் வயல்வெளி அறிவை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்றதால்...


இன்று... எம் விதைகள் மலடு... எம் வயல்கள் மலடு... எம் ஆறுகள் மலடு. எம் மழை...  மலை அனைத்தும் அனைத்தும் மலடு.
அதனால்தான்

சொல்லுங்கள்
தேநீரகத்தில்
ஊரில் மழைபெய்த செய்தி படித்து
அழாமல் இருக்க முடியுமா...

என்று அழுகிறான் வே. ராமசாமி.

நம்பிவந்த நகரம்... வெம்பிப் போகச்செய்த வேதனையை...

பசிவாடை வீசும்
நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு

என்று பதிவு செய்கிறான்.

ஒரு சிறுகுழந்தை
பிறிதோர் குழந்தைக்கு வழங்கும்
முகாந்திரமற்ற
முத்தச் சுவையுடன்
ஒருத்தரையும்
அன்பு செய்ய முடிவதில்லை...

என்றும் தன் ஈரம் வாங்க எவருமில்லையென்ற தவிப்பில்... இந்த நகரம் தந்த  மனச்சுமையை தமிழில் இறக்கி வைக்கிறான்.

வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்...

வே. ராமசாமிக்கென வாய்த்த... உத்தி பிடித்துக்கொண்டு விளையாடுகிற நடை.

கொழித்துச்
செழிக்கிறது வாரியம்
நலிந்து போனது
விளையாட்டு...

இதற்குள்ளாக பேசப்படுகிற அரசியல் பெரிது.

இன்று
பசிய சோள நாற்றில்
வாய் வைத்து
அலகில் அறைவாங்கிய
பசுவின் துயரோடு
பாதையில் போகிறேன்...

படித்தது உள்ளுக்குள் ஊறித் தளும்புகிறது கண்ணீர்.

தைப்புராக்களின் கேவலில் நிறையும் கிணறாக இத்தொகுப்பு நெடுக எம் மக்களின் வாழ்வே நிறைந்து வழிகிறது.

முன்னத்தங்கால்
கிளைபோட்டு
பின்னத்தங்கால்
தரையூன்றி
அவ்வெள்ளாடு குடிப்பது
இலைகளின்
முலைப்பால்...

ஓவியர் மருதுவிடம் கொடுத்து இந்த வரிகளை ஓவியமாக்கிப் பார்க்கவேண்டும்.

உழுது முடித்த
ஓய்வில்
தகப்பன்
தயாரித்துத் தந்த
பூவரசு
இலைச் சுருட்டில்
பீப்பீ எழுப்பும்
அம்மணச் சிறுவனின்
இசைக்குப்
பதிலறுக்கத்தான்
காலமெல்லாம்
கூவித்திரிகிறது குயில்...

இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்த நம் இனத்தை இனங்கான இக்கவிதை போதும்.

ஆமணக்கு
முத்துபோலும்
பொடித்தவளை

பெருவிரல் நகமாய்
சின்னநண்டு

முட்டையோட்டின்
ஈரான்காயாத
கோழிக் குஞ்சு

கவிதை...

என் ஆசான் அப்துல் ரகுமான் படித்தால்... தனிமையில் படித்தாலும்.... அவரிடமிருந்து அடடே... சொல்லவைக்கும் அழகு!

கார்காலத்தில்
எல்லா வீட்டின்
கதவுகளும்
ஆகுதி நடத்தும்
வேர்பிடித்து
வளரும் பசுமரமாக...

இப்படி... இப்படி...   எழுதி... எழுதி...  தவளைகளை பெய்கிற மழை... கொக்குகள் காய்க்கிற மரங்கள் நினைந்த மலையான்குளத்து வாழ்வை சுண்டக்காய்ச்சி சுவையான சீம்பாலை உங்கள்முன் நீட்டி இருக்கிறான்.

சுவையுங்கள்.

கிளிக்கூட்டம் விரட்டவும்
மனசிராது....

என்கிற எம் பேரன் வே. ராமசாமியோட மனச... என்னோட பேச்ச கேட்ட கோபத்துல காயப்படுத்திடாதீங்க.

அன்புடன்
அறிவுமதி.

Monday, September 5, 2011

கரிசல் நாட்டுக் கருவூலங்கள்

"கலப்பை "வெளியீட்டு எண் 3
கரிசல் நாட்டுக் கருவூலங்கள்
நூலாசிரியர் ;எஸ் .இலட்சுமணப்பெருமாள்
பக்கங்கள் 144 ;விலை 100

Tuesday, April 26, 2011

Wednesday, March 16, 2011

செவக்காட்டுச் சித்திரங்கள்

கலப்பை வெளியீட்டு எண் 1
இதுவரையிலான எனது சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு
பக்கங்கள் 208
விலை 130 ரூபாய்
நூல் பெறுவதற்கு அழையுங்கள் 09444 83 83 89
மின்னஞ்சல் kalappai.in @gmail.com

குறடு

கலப்பை வெளியீட்டு எண் 2
அழகிய பெரியவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
பக்கங்கள் 200
விலை 130 ரூபாய்
நூல் பெறுவதற்கு அழையுங்கள் 09444 83 83 89
மின்னஞ்சல் kalappai.in @gmail.com

Sunday, January 16, 2011

சம்சாரி வாழ்வில் ..

செவக்காட்டிலே மழை. சம்சாரியின் மனம் களி துள்ளுகிறது .ஆனந்தத்தில் அவன் மூச்சுக் காற்றிலிருந்து தண்ணீர்ப்பசை மிகுந்த மேகங்கள் உற்பத்தியாகி மழை மேலும் வலுக்கிறது .ஒருவேளை சம்சாரி செத்துச் சுண்ணாம்பாகி பாடையில் போகும்போது கேளுங்கள் ,அப்போதும் இம்மழை எனக்கு வேண்டுமென்பான் .செந்நிலத்தில் உழவன் ஒருவன் இறந்து விட்டானானால் அவனது சிதை எரியும் போது நீங்கள் உற்றுப்பாருங்கள்,ஆங்கே தெரியும் தண்ணீரின் தீ நாக்குகளில் அவன் ஆன்மா சுகமாக முத்துக் குளித்துக் கொண்டிருப்பது.

பூமியிலே நீரின் கூர்முனைகள் சிற்பம் செதுக்கும் சத்தம் அவனுக்கு மட்டுமே கேட்கிறது .மேகத்தின் செய்திகளைக் குழிவிழுந்த கண்களால் அவன் துலக்கி விடுவான் .அன்றாடம் வானத்தின் கண்ணாடியில் அவன் முகம் பார்த்து உரையாடி ஒரு மொழியைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறான்.இனி இவ்வுலகம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் உழவனின் தாய்மொழியைப் பாடம் பண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை .

இதோ! நமது குடல்களுக்கு ஜீவச்சத்து வழங்க விதை நெல்லை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் .வாசலிலே யாரது? அய்யய்யோ ஆத்தே! வட்டிக்காரன் அல்லவா வழிமறித்து நிற்கிறான் .சாதிகளுக்குப் பிறகு முதல் தீமையும் மொத்தத் தீமையும் இந்த வட்டிக்கு விடுகிற கொடும் பாவியால்தானே உருவாகிறது .ஊறிய விதைநெல் மணிகள் உறங்கும் கடகாப்பெட்டியைப் பிடித்திழுத்து கடன் பணத்தைத் திருப்பிக் கேட்கிறான் ."விளைவித்துத் தருகிறேன்" என்றால் தந்து விட்டு விதை என்கிறான்.விவசாயியின் வெள்ளாட்டங் குட்டிக் கண்களுக்கும் கந்து வட்டிக்காரனின் கள்ளப்பிறாந்துக் கண்களும் நிலை குத்தியபடி நின்ற அந்தக் கணத்தில் வந்துதான் செம்புல நீரின் தொகுதியொன்று நிலைப்படியில் அலையடிக்க வேண்டும்?.தண்ணீர் பாதம் தொட்டதும் சம்சாரியின் பயிராசை தேகம் எங்கும் புல்லரிக்கிறது .

ஒரு கையால் தோளில் துண்டைப் போட்டு முறுக்குகிறான் .இன்னொரு கையை அடிமடியில் வைத்திருக்கிறான் .ஆனால் அப்பிராணிப் பயல் செம்மண் நீரின் வண்ணத்தில் உள்ளம் கரைந்து மாய்கிறான் .கால் நகக்கண்கள் பத்திலும் உதடுகள் எடுத்து செந்நீரை உறிஞ்சுகிறான் .பச்சை நிறத்தை எழுதி எழுதிப் பார்க்கிறான் .கண்ணியிலே மாட்டிக் கொண்ட புறாவைப்போல் படபடக்கிறான் .விட்டால் பறந்து சென்று வயலில் நெல்லைப் பாவி விடுவான் அந்தப் படுபாவியோ விடவில்லை .மாறாகக் கன்னத்தில் ஒரு அறையை விட்டான்.இதெல்லாம் உழவனுக்கு வலியில்லை.பூமி உருண்டையைக் கருச்சுமந்து பெற்று எடுக்கிறதைப் போன்ற பெரிய பெரிய வலிகளே பெருமை அவனுக்கு .பின்னே எத்தனை காலமாக ஏழு கண்டங்களுக்குமான ஊழியை மன்றாடித் தடுத்து வைத்திருக்கிறான் .

பெருமழையின் நாட்கள் முழுதும் சம்சாரிக்கு உறக்கமில்லை .கதிர் முற்றிய வயல் வரப்பில் தலைவைத்து "அப்பாடா " என கண்ணயர்வதே அவனுக்கு நிம்மதியானது .அவ்வேளையும் தூங்குவது சரியில்லை என்று இவ்வேளை முதல் சிந்திக்கத் தொடங்கியுள்ளான் .ஏனெனில் ஒரு குருவியைத் துரத்திவிட்டால் மனிதனின் சாப்பாட்டு வட்டியில் ஒரு பருக்கை கூடுமென்பது நம்மாளின் கணக்கு .காலனோ வாடி வீதக் கணக்கைக் கேட்கிறான் .வேறொரு நேரமாய் இருந்தால் -வட்டிக்காரனின் இறுதிக் கணக்கை முடித்திருப்பான் .இயலும் .ஆனால் செய்ய மாட்டான் .நிலத்தில் கலப்பைக் கொளுவைப் பதிக்கிறவன்,வட்டிக்காரனின் தொந்தியில் உழவடிக்க எவ்வளவு நேரமாகும் ?பயிரின் வேதனை தெரிந்தவன், உயிரின் வேதனை அறியாமல் இருப்பானா?.ஆன்மிகம் ,அறிவியல் இன்னபிற தத்துவங்கள் எல்லாமே மண்ணிலிருந்து அந்தரத்தில் நிற்கின்றன .உழவன் மட்டுமே வேர்களை மண்ணுக்குள் வைத்திருக்கிறான் .உழைப்பாளிகளின் உயிர் பிரியுங்கால் எல்லாவற்றையும் சுழியிலிருந்து .மறுபடியும் தொடங்க வேண்டி வரும் இப்படி உழவன் எண்ணமிடுவது வட்டிக் காரர்களுக்கல்லவா ?தெரிய வேண்டும் .


தெரிந்தேதான் செய்கிறார்கள்,விதைத்து விட்டால் பணத்தைத் தந்து விடுவான் .தந்து விட்டால் நெஞ்சை நிமிர்த்துவான்.சும்மாவே உழவப் பயல் சுயேச்சைகளின் பெருங்கொண்ட சமுத்திரங்கள் நிரம்பி வழிகிறவன்,மண்ணிலிருந்து- சத்தியத்திலிருந்து -வெப்பாலையில் இருந்து இவனது தன்னறிவு வந்திருக்கிறது .ஆகவே அமுக்கி வைக்க வேண்டும்.பேசவே விடக்கூடாது .சொன்னால் அவனது நியாயம் தெரிந்துவிடும்.ரெம்பப் பூரண யோக்கியனாக இருக்க வேண்டாம்;கடுகளவு நல்லவனாக இருந்தாலே போதும் ,உழவன் பிழைப்பதற்கான வழிகளைப் பார்த்துப் பார்த்து முள்ளடைத்து விடுவார்கள் .

அதுவும் வேறு ,இப்போது பெரிய வட்டிக்காரன் ஒருத்தன் ஊர் நாடெங்கும் உலக்கையில் கை நீட்டுகிறான் .சின்ன வட்டிக்காரன் சிற்றூர் நீர்நிலை எனதென்றால்,பெரியவன் பேரூர் நீர்நிலை எமதென்கிறான்.குடைவாரிய வண்டியாய் குடியானவன் கதியான இப்பொற்காலத்தில் சம்சாரியின் குடலைப் பங்கு வைப்பதில் போட்டி .இவன் கிணற்றைத் தூர்த்துத் துடைத்தால் அவன் ஆற்றை முழுங்குகிறான் .முன்னெச்சரிக்கையாக அவர்கள் வீசிஎறிந்த எலும்புத் துண்டுகளைக் கவ்விக்கொண்ட நாய்களின் பொய்ச்சரிதங்களில் காறித்துப்ப ,வரலாறு மாபெரும் கோழையை உருட்டித் திரட்டுகிறது .ஒருநாள் புளிச்சென மூஞ்சியில் துப்பிவிடும் ..

2
வட்டிக்கார நாய் விதைப் பெட்டியைப் பிடிக்கிறது .வேறொரு நாய் தூக்குக் கயிற்றைத் தூக்கி வருகிறது ..உழவனைத் தூக்கிலிட்டே தீர வேண்டுமென்கிறார்கள் .தூக்கிலிட வேண்டுமென்பவர்களைத் தூக்கிலிட்டால் பிரபஞ்சத்தில் கயிறுகளுக்குப் பஞ்ச மேற்பட்டுவிடும் .இன்னொரு கழுதை 'நான் தருகிற மலட்டு விதையை ஊன்று "என ஊளங்கெடுக்கிறது ..அவனிடம்" நீ நிறையப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் .ஆனால் அந்தப் பிள்ளைகள் எல்லாம் மொன்னையாக இருக்குமென்றால் ஓப்புக் கொள்வாயா ?"என இங்குள்ள கழுதைகள் கேட்டிருக்க வேண்டுமல்லவா?கேட்கவேயில்லை .வெளி ஊர்க் கழுதைகள் டாலர் நோட்டைச் சுருட்டி மலம் துடைத்து இதுகளிடம் கொடுக்க ,உள்ளூர் கழுதைகள் மலத்தை நக்கி நக்கி ரூபாய் நோட்டை அடுக்கிக் கொண்டிருக்கின்றன .

இப்படி எல்லாருமாகக் கொதவளையை நெரித்தால் சம்சாரியார் என்ன செய்வார் ?கண்ணீர் விட்டு அழுகிறார் .சாதரணக் கண்ணீர் அல்ல :.அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்" மேகங்கள் சூல் கொண்டு மழை பெய்யும் கருப்பைக் கண்கள்தான் இப்போது பூலோகமெங்கும் கண்ணீர் விட்டு அழுவது .அழுகை கண்டும் இரங்கவில்லை வட்டிக்காரன் .சம்சாரியை அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே தள்ளி கதவை வெளியே பூட்டிவிட்டுப் போய்விட்டான் .மழை ச்சோவெனப் பெய்கிறது .விதைப்பட்டம் வேறு கடந்து கொண்டுள்ளது .சம்சாரி சிறையில் இருக்கிறான் .

"சங்க இலக்கியத்தில் காணப்படும் மண்பாண்டங்களில் எவ்வெவ்விடங்களில் எல்லாம் ஓட்டை உள்ளது"என்று ஆராய்ச்சி செய்து விம்மிதங் கொள்கிற அறிவாளர்களின் ஆதரவை உழவன் கேட்கிறான். .இங்கிருந்த வண்ணமே மேலைத் தேயங்களின் மூக்கில் கடப்பாரை போட்டு டார்ச் அடிக்கும் நல் மனிதர்களின் கருணையைக் கோருகிறான் .நல் இசங்கள் எல்லாமே நல்லதுதான் .உழவுக் கோடுகளையும் அத்தோடு கண்ணுற வேண்டும் .விவசாயி குரலுக்கு வலிமை இல்லை.{வந்துகொண்டு இருக்கிறது} .எனவே கனவான்களே நீங்கள் முதலில் பேசுங்கள் ".மாரிக்காலத்தில் வயசான பக்கத்துப் புஞ்சைக்காரனுக்கும் சேர்த்து விதை வீசித் தருகிறானே இளைய சம்சாரி "அதனைப் போன்றதுதான் இதுவும் .

3
வீட்டுக்குள்ளே ஒரே இருட்டு .ஓடுகளின் மேலே நீர்த்துளிகள் நர்த்தனமாடுகின்றன .முக்காவாசி ஓடுகள் பாசி பிடித்துள்ளன .தகரத்தில் ஓட்டை .ஒழுகுகிறது மழைநீர் .தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாயிற்று ஒழுகுவதைப் பிடிக்க .

கும்பாவோ ,தூக்குச் சட்டியோ எதோ ஒரு ஏனத்தில் கால் இடறி குப்புறடிக்க விழுந்தான் சம்சாரி .சாணி மணக்கும் மண்தரை எங்கும் ஈரம் .'உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்படமாட்டான்' என்று பாரதி சொன்னானே, அதைப் போன்ற நசநசப்பு. .உழவனின் தந்தை கைப்படக் குழைத்துக் கட்டிய செம்மண் சுவர் தண்ணீரில் கரைகிறது .உள்ளே அவற்றின் விலா எலும்பு மாதிரியான கருங்கற்கள் பல்லிளிக்கின்றன .நீராட்டில் சுவர்ப்பல்லிகளும் தப்பவில்லை,தத்தளிக்கின்றன..பனை உத்திரங்கள் மேலும் கருத்து விட்டன .தெற்கு மூலையில் ஒரு ஓடு இல்லை.அவ்விடத்தில் வானம் ஒரு சிலேட் அளவு தெரிகிறது .மழை உள்ளேவர அவ்விடம் மிகவும் ஏற்றதாய் உள்ளது .தானியங்கள் நிறைய வேண்டிய குலுக்கையில் பச்சைத் தண்ணீர் நிரம்புகிறது .மண் பானைகள் பந்து போல் மிதக்கின்றன .உப்புப் பானையிலே உப்புக் கரைந்து வெகு நேரமாகிவிட்டது .அடுப்பாங் குழிக்குள் தண்ணீர் கொப்பளிக்கிறது .புகைக் குழியிலோ புகை ஈரமாக வெளியேறுகிறது .

கதவின் கால்ப்பகுதியில் ஓட்டை போட்டது யார் என்று நினைக்கிறீர்கள் ?நமது மாட்சிமை தாங்கிய சொசைட்டி அதிகாரிகள்தான் .அவர்கள் கடன் கேட்டு வரும் போதெல்லாம் இந்தக் கோவணாண்டிகள் கதவடைத்து விட்டு எஸ்கேப் ஆனால் விடுவார்களா ?கல்லைத் தூக்கிபோட்டு கதவின் சிராயை எடுத்து விட்டார்கள் .அஞ்சு பைசாக் கடனில் மூன்று பைசாவைப் பிடுங்கிக் கொண்டு ,ரெண்டு பைசாவைத் திருப்பாததற்கு அபராத வட்டியை அபாரமாகப் போட்டு போட்டு அய்யாயிரமாக்கும் மன்னாதி மன்னன்கள் தான் அத்திருப்பணியை செய்தது .அந்த ஓட்டை வழியே பார்த்தால் ,வெளியே நீரின் சேனைகள் படை நடத்தி ஆர்ப்பரித்துச் செல்வது தெரிந்தது .

கதவைத் தட்டி உடைத்துப் பெயர்த்து வெளிவந்தான் .ஆங்கே மாட்டுத் தொழுவம் இருந்த இடமே புலனாகவில்லை .இடிந்து மண்ணும் கல்லும் குமிந்து கிடந்தது தொழுவம் .அந்த இடிபாடுகளுக்குள்தான் பசுவும் கன்றும் இறந்திருக்க வேண்டும் .இப்போது சம்சாரி அழவில்லை....அவன் உணர்வுகள் பனிக்கட்டிபோல் சில்லிட்டிருந்தது .துயரம் அழுவதையும் மிஞ்சிப் போய்விட்டால் என்ன செய்ய முடியும் ?

தொழுவம் தொலைந்தது .ஆநிரை அழிந்தது .வீடாவது தப்புமாவெனில் இல்லை ..இவ்வளவு மழையை அது தாக்குப் பிடித்ததே அதிகம் .முதலில் வீட்டோடு விழுந்து மரணமடைந்தது முக்கோண வடிவிலான பனைச்சட்டங்களும் அது தாங்கியிருந்த ஓடுகளும் .சரிந்த ஓடுகள் எழுப்பிய ஒலி ,சின்ன இடிமுழக்கம் போன்றிருந்தது .வலிய பட்டாசு வெடித்த சத்தமுமாகக் கேட்டது .மிச்ச வீடும் நிச்சயமாக இடியும் .பெருங்காற்றில் காய்ந்த பனங்கீற்று தலை கீழாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்குமே! ,அது இந்த நேரத்திலும் சொத்தென்று விழுந்து விடுமல்லவா? ஏதேனும் உத்திரவாதமுண்டா அதற்கு?
மொத்த வீடும் கட்டமண்ணாகிக் கரைகிறது .இடிந்த வீட்டிற்குள் இருக்கிறாள் ஒருத்தி .அவள் நமது சம்சாரியின் மனைவி .
4
நிறைமாசக்காரி.பிள்ளைப்பேற்று வலியில் துடிக்கிறாள்.வெட்ட வெளியில் ஆவாரம் பூங்கொத்தின் முகம் அலறும் காட்சி அது .மூக்குத்தியில் மின்னும் கொளுஞ்சிப்பூவின் இளஞ்சிவப்பு நிறக்கல்லால் பயனேது அப்போது? பிரசவ வலியில் இரண்டு கைகளாலும் ஈரமண்ணில் ஒரு முழம் ஆழத்துக்கு குழிதோண்டி விட்டாள்.தண்ணீர் அக்கிடங்குகளினுள்ளும் கசிகிறது .நிகழ்ந்து கொண்டிருப்பது தாய்த் தெய்வங்களின் நெஞ்சிலும் கயமை குடியேறிய கணம் .பிறக்கவிருப்பது சம்சாரியின் தலைமகவு .விதை வீச வேறொரு உழவன் வரப்போகிறான் .தாயின் கன்னிக்குடம் -பனிக்குடம் உடைந்து விட்டது .தகப்பன் சிதறித் தெறிக்கும் துளிகளைக் கண்டான் இத்தனையிலும் அந்தப் பைத்தியக்காரன் உயிர் தாங்கி நிற்கிறான் .செத்திருந்தாலாவது அந்தச் சிசுவாக மீண்டிருப்பான் .அதற்கும் வழியின்றி வெறும் மூர்ச்சைதான் ஆகியுள்ளான்.பேச்சில்லை ;மூச்சில்லை அவ்வளவுதான்

மூர்ச்சைக்குள் உழவனின் கிராமம் தட்டுப்படுகிறது .அங்கே தரையெல்லாம் சுண்ணாம்பு ,செடியில்லை ;கொடியில்லை ;புல்பூண்டு ;புழு ஏதும் இல்லை .பனித்துளி இல்லை .அதனைச் சுவைக்க முயல்களின் நாக்கு இல்லை .ஆனால் ஆலைக்காரன் இருக்கிறான் இருக்கிறான் .அவன் உருவாக்கிய ரசாயன தெப்பமும் உள்ளது.ஊரின் எல்லா ஆடுகளும் அதில் செத்து மிதக்கின்றன .மாடுகளின் வயிறுகள் ஊதி மலை எழும்பியுள்ளன .உழவன் ஆலைக்காரனின் சட்டையைப் பிடித்து உலுக்குகிறான் .

ஆலைக்காரனுக்கோ அதிர்ச்சி.இந்தப் பயல் இந்தப் பயல் இன்னுமிருக்கிறானே என .வியந்து போனான் ."முட்டாப்பயலே பூமியோடு உனக்கு மட்டும் ஏன்? இவ்வளவு சொந்தம் .செத்தொழிய மாட்டாயோ நீ" என்றான்."சாவது பெரிதில்லை.அதற்கு முன்னால் கொஞ்சம் தானியங்களை தூவிவிட்டுப் போகிறேனே" என அந்தக் களிமண் பயல் கூறினான் ."விதைத்தாலும் முளைக்காது.உலகில் இப்போது வயிறுகளே இல்லை.சுண்ணாம்புத் தரையில் பச்சையே துளியுமில்லாத தேசங்களில் வயிறுகள் இருக்க வாய்ப் பில்லையடா,நீயும் நானும்" ஒரு இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதுமென்று தத்துவங்களை மென்று ;குதைத்து;எதுக்களித்து எதுக்களித்து சப்பிக் கொண்டிருக்கையில் நேராய் எவனோ வந்து புஞ்சைக் காட்டை அழித்தால் போதும்னு எறங்கிட்டான்.விதைக் கொட்டையைத் தவிர உழவனிடம் வேறு விதைகள் இல்லாமப் பண்ணிட்டான் .பழைய நாடு ஏன் அழிந்தது என்று தெரியாமல் மனிதகுல ஆய்வாளன் ஒருவன் துப்புத் துலக்கிக் கொண்டுள்ளான் .வா அவனிடம் கேட்போம் :என இருவரும் நடந்தனர் .

"கொடிய அணு ஆயுதத்தால் போர் நடந்திருக்கலாம் .தண்ணீர் ,பெட்ரோல் பற்றாக் குறையால் இரத்தம் ஒழுகியிருக்கலாம் .பூகம்பமோ சுனாமியோ மழையோ வறட்சியோ மனிதர் வக்கிரத்தாலோ இப்படி எதனாலோதான் பூமிக்கு மரணம் நேர்ந்துள்ளது எது எப்படியோ உலகெங்குமிருந்த வேளாண் சமூகம் தகர்ந்ததே மூல முதல் காரணம் என்று எனது ஆய்வைத் தொடங்கியுள்ளேன் .அதிலும் மிக முக்கியமாக இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட கச்சடாக்கள் .அதனூடே கருந்திரவப் பறவை ஒன்று நாடு நாடாக நன்னாடு பார்த்துப் பறந்து வந்த தடயம் கிடைத்துள்ளது .அது ஈரப்பெருக்கின் கரைகளில் இறங்கி ஈரக்குலையை இரவல் எடுத்திருக்கலாம் .முதலில் கிணற்று மிதிகல்லில் சிறகிறக்கியது.பின்பு குளம் ,பிறகு பேராறுகள் ,கக்கடேசியில் வெளியெங்கும் ஈரப்பதங்களைப் பொட்டுவிடாமல் உறிஞ்சிக் குடித்திருக்க வேண்டும் "என்று ஆய்வாளன் சொல்லிமுடித்தான் .

"அப்படியானால் இங்கும் பல பறவைகளை நாமும் இரைபோட்டு வளர்த்தோமே ?அவைகள் என்ன பண்ணிக் கொண்டிருந்தன? "உழவனும் ஆலைக்காரனும் ஒருமித்த குரலில் கேட்டார்கள் ."இங்குள்ளவைகள் எச்சில் கொத்திக் கொண்டிருந்தன "என்று ஆய்வாளன் பதிலுரைத்தான் ".மீள வழியென்ன "என கேட்டதற்கு ,"விதைக்கத் தெரிந்த ஒருவனே முதல் தேவை .விதை நெல்லைப் போன்றவன் அவன் .யாருக்காவது விதைக்கத் தெரியுமா ?என்றான் ஆய்வாளன் ."எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும் "மயங்கி கிடந்த சம்சாரிக்கு முழிப்புத் தட்டிவிட்டது .தட்டுண்டு தடுமாறி எழுந்தான் .
5
எழுந்தவன் கைகள் அனிச்சயாய் விதைப் பெட்டியைத் தொட்டன .சம்சாரி அதைத் தோளில் தூக்கிக்கொண்டான்.மழை இன்னும் விடவில்லை .வீடும் தொழுவமும் தரை மட்டமாகிக் கிடந்தன .மனைவி எப்போது வேண்டுமானாலும் பிள்ளை பெற்று விடுவாள் .வட்டிக்காரன் வேறு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டுப் போய்விட்டான் எந்தச் சஞ்சலமும் இன்றி விதைக்கக் கிளம்பினான் விவசாயி .

இப்போது இடி பலமாக இடித்தது .அவ்வொலிக்கு வண்ணத்துப் பூச்சிகள் இலைகளின் அடியில் உறக்கம் கலைந்து விழித்தன .அவற்றின் சிறகுகள் தன்னைப்போல் விரிந்து மீண்டும் ஒட்டிக்கொண்டன .எப்போதும் இல்லாத வகையில் பனம் பொந்துகளில் கிளிகள் சிறகுகளை இறுக்கிக் கொண்டன .பசிக் கிறக்கத்தில் புள்ளினங்களும் வாடுகின்றன .குளங்கள் ததும்புகின்றன .தவளைகளின் கெச்சட்டி ஒலி அவனை இன்னும் வேகமாய்க் கெந்தித் தள்ளின .காற்றினால் முன்னோக்கித் தள்ளப்பட்டவன் போல நடை கூட்டினான் .ஊர் உலகம் மழைக்குப் பதுங்கி இருந்தது

வயலுக்குள் .சம்சாரி கால் வைத்தான் .விதை நெல்லை அள்ளி வீசினான் .வெடுக் வெடுக்கென்று வைராக்கியத்தோடு விதைத்தான் .நெல் வயலில் விழுந்ததும் இதுவரை பொழிந்த மழை அப்படியே நின்றுவிட்டது .வெறித்துவிட்டது .மழையை வெறித்து விட்டது என்று சொல்வது கூடத் தவறுதான் .இன்னும் பெய்ய வேண்டிய மழை அந்தரத்தில் நிற்கின்றன என்றுதான் எண்ண வேண்டும் .தேவைப் படும்போது புதிய மழையில் நனைய வேண்டுமல்லவா?

[குறிப்பு;மழை பெய்கிறது--:வட்டிக்காரன் வாசலில் --: மனைவிக்கு பிரசவ வலி -:விதைக்க வேண்டும்-
சம்சாரி முதலில் என்ன செய்வான்? என்ற அம்மாவின் வாய்மொழிக் கதையை மையமாகக் கொண்டு எழுதியுள்ளேன் ."பூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும்"என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .}

வே.ராமசாமி
.

Friday, January 14, 2011

பசுவும் அம்மாவும்

பசுவும் அம்மாவும்

எத்தனை மாதம் கழித்துப் போனாலும்
பசுவுக்குத் தண்ணிகாட்டி விட்டுத்தான்
நமக்குச் சோறு வைக்கிறாள்

ஆட்டு உரலில் நக்கிய வாய்மட்டி காயாமல்
பெருமூச்சில் அது பீய்ச்சியடிக்கும்
தவிட்டுத் துளிகளில் நனைந்தாலும்
செல்லமாகத்தான் தட்டுகிறாள் மன்னையில்

வந்திருக்கிறானே என வீடிராமல்
வால்போல் மூக்கணாங் கயிறிழுத்து
காட்டில் அவளின் அன்றையத் தடங்களைப்
பதிக்காமல் திரும்பமாட்டாள்
மாலைவரை

அச்சுவெல்லத் தேநீராற்றுகையிலும்
சிணுக்கோலியில் தன் கூந்தல் நீவுகையிலும்
பசுவின் காம்பாகத்தான்
பயன்படுத்துகிறாள் விரல்களை

புறப்படும் தேதிசொல்லிக் கலங்கடித்தால்
அதன்குரல் கேட்கும் வரைதான் எல்லாம்

எப்படி முயன்றாலும் முடியாது
ஒரு பசுவும்கன்றும் இருக்கும் வீட்டில்
அம்மாவுக்குச் செல்லப்பிள்ளையாக

வே.ராமசாமி
"கிணற்றுக்குள் முளைத்த மருதாணி "என்ற எனது தொகுப்பிலிருந்து

Tuesday, January 11, 2011

எனது பழைய வீடு


எனது பழைய வீடு

எனது பழைய வீட்டில்
ஆடிக்காற்றில் பறந்த ஓடுகள்
ஆகாயத்தின் சில வாசல்களை
எனக்குத் திறந்து விடும்

இரவில் பார்த்தால்
நிலவு தலைகீழாய்ச் சென்று
திகைக்க வைக்கும்

கோரைப்பாயில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணுகையில்
முதுகினடியில்
உறுத்திக்கொண்டிருக்கும்
ஆட்டாம் புழுக்கைகள்

சாரலென்றால்
சாணம் மணக்கும் தரையில்
முத்தங்களைப் பதிக்கும்

பெருமழையென்றால்
ஓட்டுத் தகரத்தில் கொட்டடித்து
அடிக்காதே என்று
கெஞ்ச வைத்து விடும்

வானவில்லென்றால்
தொடுகிற உயரத்தில்
வந்து நிற்கும்

மேகங்களை அண்ணாந்தால்
அவற்றின் உள்ளங்கால்களைக்
காட்டிச் செல்லும்

சூரிய ஒளிக் கோடுகள்
எனக்கொரு ஊஞ்சலைக்
கொண்டு வரும்

பொந்து எலிகள் என்னோடு
பாதிப் பகையும் பாதி சிநேகமும்
வளர்த்துத் திரியும்

அடிக்கடி வரும்
விருந்தினர்கள் என்றால்
பாம்புகளைச் சொல்ல வேண்டும்

தீடீர் விருந்தினர் என்றால்
வீட்டினுள் முளைத்த
தும்பைகளைச் சொல்ல வேண்டும்

மூதாதையரின்
ஒரு முகம் போலவோ
அநாதி காலத்தையும் தாண்டிய
ஒரு பெருமரம் போலவோ
எனது பழைய வீடு
என்னுள் உறைகிறது

எனது நிறம்
எனது பழைய வீட்டின் நிறம்
எனது வாசம்
எனது பழைய வீட்டின் வாசம்
எனது ஞாபகம்
எனது பழைய வீட்டின்
அடுப்பில் கனலும் கங்குகள்
எனது பழைய வீட்டினுள்
இருப்பதுவே
நான் விரும்பும் நாடு

வே..ராமசாமி
நன்றி
தை; இதழ் ஆறு 2011
நீலமணி சிறப்பிதழ்

Friday, January 7, 2011

மழை வேட்டல்

நின் உதடு

பெரிது

பிரபஞ்சம் முழுவதும்

முத்தமிட ஏதுவானது

இங்கே

விசும்பும் கணம் நோக்கி

வேர்முடிச்சுகளில்

கண்ணீர் வாங்கி

புழுங்கி அழுகிறதுநிலம்

வெப்பங்குடித்து

மேனி சுருங்கி

கிழவியாயின தாவர இலைகள்

நீர் வேட்கையில்

வியர்வைத்துவாரம்அடைந்து

நாற்றமெடுக்கிறது

மனிதர் குருதி

தகிக்கும்கதிரொளியில்

உன் நீர்மைத்துளிகளைக்கண்ணுற்று

கழுத்தை நெரித்துபெய்யச் சொல்ல

இயலாத நான் -

வாடிய புளியமரத்தடியில்

ஈரத்துணியாய்என்னை

கசக்கிப்பிழியுமுன்

நீபொழி

பேரோலமெடுத்து

முத்தமிடு!-

வே. ராமசாமி